தஞ்சை கோவிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 கிலோ பூட்டு
தஞ்சை கோவிலுக்கு திண்டுக்கல்லில் தயாரான 40 கிலோ பூட்டு அனுப்பப்பட உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது இங்கு தயாரிக்கும் பூட்டுகள் தான். பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற திண்டுக்கல்லில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த தொழில் கொடிகட்டி பறந்தது. மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பூட்டு தயாரிப்பு கூடங்கள் இருந்தன. காலப்போக்கில் பூட்டு தொழில் நலிவடைந்து விட்டதால் தற்போது 15-க்குட்பட்ட பூட்டு தயாரிப்பு கூடங்களே உள்ளன. எனினும் திண்டுக்கல் பூட்டுகள் தனித்துவம் பெற்று திகழ்கிறது.
இதனால் முக்கிய கோவில்களுக்கு திண்டுக்கல்லில் இருந்தே பூட்டுகள் தயாரித்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த திருப்பழனத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு, திண்டுக்கல்லில் இருந்து 3 பூட்டுகள் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. அதன்படி 4 கிலோ, 10 கிலோ, 40 கிலோ எடை கொண்ட 3 பூட்டுகளை நாகல்நகரை சேர்ந்த சாந்தகுமார் (வயது 28) என்பவர் சக தொழிலாளர்களுடன் இணைந்து தயாரித்து உள்ளார்.
இதுகுறித்து சாந்தகுமார் கூறுகையில், நாங்கள் 3 தலைமுறைகளாக பூட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு பூட்டுகளை தயாரித்து கொடுக்கிறோம். இந்த 40 கிலோ பூட்டை தயாரிக்க 15 நாட்கள் ஆனது. மேலும் அந்த பூட்டு 10 லீவர்களை கொண்டது. 3 முறை சாவியை சுற்றினால் தான் திறக்கும். இதற்காக தலா 2 கிலோ எடையில் 2 சாவிகளை தயாரித்து உள்ளோம். விரைவில் பூட்டுகள் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன, என்றார்.
Related Tags :
Next Story