நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு: நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
தாடி வைத்த நபர்
வயது மூப்பு காரணமாக கட்சி மேலிடம் உத்தரவின்பேரில் முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்று உள்ளார்.
இந்த நிலையில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தாடி வைத்த நபர், கர்நாடக முதல் மந்திரியாக பதவி ஏற்பார் என்று மயிலாரா கோவிலின் தர்மகர்த்தாவும், பிரபல ஜோதிடருமான வெங்கப்பய்யா உடையார் கூறியுள்ளார். அந்த தாடி வைத்த நபர் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது. இது கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் பூஜை
இந்த நிலையில் சிக்கமகளூருவில் பெய்த தொடர் கனமழை காரணமாக சிக்கமகளூரு அருகே உள்ள இரேகொலலே குளம் நிரம்பியது. அந்த குளத்தில் நேற்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தனது மனைவி பல்லவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து பாகினா பூஜை செய்தார்.
பின்னர் சி.டி.ரவி எம்.எல்.ஏ.விடம் தாடி வைத்த நபர் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்பார் என்று ஜோதிடர் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-
பதவியை எதிர்பார்க்கவில்லை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபை குறித்து விவாதிக்க டெல்லி சென்று உள்ளார். தாடி வைத்த நபர் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று ஜோதிடர் கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. மாநிலத்தில் எந்த பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேசி உள்ளார். இதில் தவறு இல்லை.
நாட்டை பாதுகாக்கும் பிரதமர் தான் வேண்டும் என்று தேவேகவுடா கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது பிரதமராக உள்ள மோடி நாட்டை காக்கும் வகையில் செயல்படுகிறார். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படு்ததி வருகிறார். ஒரு காலத்தில் ஓட்டுக்காக ஆட்சி செய்தனர். ஆனால் மோடி நாட்டுக்காக ஆட்சி செய்கிறார்.
செழிப்புடன் வாழ...
இரேகொலலே குளம் நிரம்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் வருணபகவான் மழை தர வேண்டும். குளங்கள், அணைக்கட்டுகள் நிரம்பி விவசாயிகள் செழிப்புடன் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்.
சிக்கமகளூருவுக்கு சுற்றுலா வருபவர்கள் சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகள், மதுபான பாட்டில்களை வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story