மந்திரிகளின் பெயர் பட்டியல் இன்று வெளியீடு; பசவராஜ் பொம்மை பேட்டி


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.
x
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.
தினத்தந்தி 3 Aug 2021 2:31 AM IST (Updated: 3 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிகளின் பெயர் பட்டியலை பா.ஜனதா மேலிடம் இன்று அறிவிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு: கர்நாடக மந்திரிகளின் பெயர் பட்டியலை பா.ஜனதா மேலிடம் இன்று அறிவிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

மந்திரிசபை விரிவாக்கம்

கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த மாதம்(ஜூலை) 28-ந் தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்றவுடன் அவர் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி உள்பட மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து, தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க உடனே டெல்லி வரும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் மாலை அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜே.பி.நட்டாவை சந்திக்கும் முன்பு அவர், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் மாலை 6 மணியளவில் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மந்திரிகளின் பெயர் பட்டியல்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 3 பெயர் பட்டியலை அவரிடம் வழங்கினேன். இதில் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும். மந்திரிகளின் பெயர் பட்டியலை கட்சி மேலிடம் நாளை (இன்று) வெளியிடும். 

எத்தனை பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி, முதல்கட்டமாக எத்தனை பேர் மந்திரிகளாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் கட்சி மேலிடமே முடிவு செய்யும். பெங்களூருவில் நடந்த ஆப்பிரிக்க மாணவர்கள் சம்பவம் குறித்த தகவல் எனக்கு வந்தது. மாணவர் ஒருவர் இறந்துள்ளார். அந்த விஷயத்தில் சக மாணவர்கள் போலீஸ் நிலையம் முன்பு கூடி கலாட்டா செய்துள்ளனர். அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விவகாரத்தை போலீசார் சரியான முறையில் கையாண்டுள்ளனர்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story