வீட்டுமனை கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி; ஹாசனில் பதுங்கிய ரியல்எஸ்டேட் அதிபர் கைது


வீட்டுமனை கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி; ஹாசனில் பதுங்கிய ரியல்எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 2:32 AM IST (Updated: 3 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வீட்டுமனை தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான ரியல்எஸ்டேட் அதிபர் ஹாசனில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு: பெங்களூருவில் வீட்டுமனை தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான ரியல்எஸ்டேட் அதிபர் ஹாசனில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீட்டுமனைகள் கொடுப்பதாக...

பெங்களூரு ராஜாஜிநகரில் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் தினேஷ் கவுடா. இவர், குறைந்த விலையில் வீட்டுமனைகள் கொடுப்பதாக விளம்பரம் செய்திருந்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைகள் கொடுப்பதாக மக்களிடம் அவர் கூறி வந்திருந்தார். இதனை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை கொடுத்திருந்தனர்.

இதற்காக வீட்டுமனைகள் வாங்கிய நபர்களுடன், ஒப்பந்தம் செய்து, அதற்கான ஆவணங்களையும் பொதுமக்களிடம் தினேஷ்கவுடா வழங்கி இருந்தார். ஆனால் ஒரே வீட்டுமனைக்கான பத்திரங்களை 5 முதல் 10 நபர்களுக்கு தினேஷ்கவுடா வழங்கியதாக தெரிகிறது. அவரிடம் பணம் கொடுத்த யாருக்கும் வீட்டுமனைகள் கொடுக்கவில்லை. இதனால் தினேஷ்கவுடாவிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து மக்கள் ஏமாந்து இருந்தனர்.

1,250 பேர் புகார்

இதுதொடர்பாக ராஜாஜிநகர் போலீஸ் நிலையத்தில் முதலில் 700 பேர் புகார் அளித்திருந்தனர். நேற்று முன்தினம் 500 பேர் புகார் அளித்தனர். அத்துடன் போலீஸ் நிலையம் முன்பாக பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு இருந்தனர். ஒட்டு மொத்தமாக 1,250-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் பேரில் ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் தினேஷ்கவுடா தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தினேஷ்கவுடா பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், தான் யாரிடமும் பணம் வாங்கி மோசடி செய்யவில்லை என்றும், பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும், அவர்களிடம் வாங்கிய பணத்தை வேறு இடத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறி இருந்தார். அந்த வீடியோ ராஜாஜிநகர் போலீசாருக்கு கிடைத்தது.

ஹாசனில் கைது

அந்த வீடியோ மூலம் போலீசார் விசாரித்ததில், அவர் ஹாசன் மாவட்டம் அரக்கல்கூடுவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அரக்கல்கூடுவில் பதுங்கி இருந்த தினேஷ்கவுடாவை போலீசார் கைது செய்தார்கள். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினேஷ்கவுடா நாகரபாவியை சேர்ந்தவர் ஆவார். ராஜாஜிநகரில் ரியல்எஸ்டேட் அலுவலகத்தை அவர் வைத்திருந்தார். அவர் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து கைதான தினேஷ்கவுடாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story