நெகட்டிவ் சான்றிதழ் இல்லாததால் கேரளாவை சேர்ந்தவர்களை திருப்பி அனுப்பிய கர்நாடக அதிகாரிகள்
தளப்பாடி சோதனை சாவடி வழியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வந்த கேரளாவை சேர்ந்தவர்களை கர்நாடக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு: தளப்பாடி சோதனை சாவடி வழியாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வந்த கேரளாவை சேர்ந்தவர்களை கர்நாடக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
கேரளா, மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடக அரசு இரு மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதி என அரசு அறிவித்துள்ளது. இதனால் கேரளா, மராட்டிய எல்லைகளில் போலீசாரும், சுகாதாரத் துறையினரும் இணைந்து இரவு-பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தளப்பாடி சோதனை சாவடி
அதுபோல் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே தளப்பாடியில் உள்ள சோதனை சாவடியிலும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தளப்பாடி வழியாக கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமாேனார் வேலை, படிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று வந்தனர். ஆனால் பெரும்பாலானோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவில்லை.
தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்
இதனால் அவர்களை கர்நாடகத்திற்குள் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இருப்பினும் அதிகாரிகள் அவர்களை கர்நாடகத்திற்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பிவைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தட்சிணகன்னடா மாவட்ட கலெக்டர் கே.வி.ராஜேந்திரா கூறுகையில், கேரளாவில் இருந்து வரும் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வருபவர்களை நாங்கள் உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்றார்.
Related Tags :
Next Story