பெரம்பலூர், அரும்பாவூர், லப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு
பெரம்பலூர், அரும்பாவூர், லப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் 3-வது அலை வராமல் தடுக்க தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளுக்கு மட்டும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144-ன் கீழ் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் வருகிற 10-ந்தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பெரம்பலூர் நகராட்சியில், சிவன் கோவில் முதல் வானொலி திடல் சந்திப்பு வரை, வானொலி திடல் முதல் பழைய பஸ் நிலையம் வரை, பழைய பஸ் நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைவீதி என்.எஸ்.பி. ரோடு, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். அரும்பாவூர் பேரூராட்சியில் தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை, பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை அடங்கும். லப்பைக்குடிகாடு பேரூராட்சியில், மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை அடங்கும். மேற்கண்ட பகுதிகளில் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. மருந்தகங்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான செயல்பாடுகள் மட்டும் உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதனை தவிர்த்து பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story