குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
வைப்பம் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் வைப்பம் கிராமத்தில் உள்ள இருளர் காலனி தெருவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி, அரியலூரில் இருந்து சுண்டக்குடி செல்லும் சாலையில் தடுப்பு கம்பிகளை வைத்து, காலிக்குடங்களுடன் அமர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், எங்களுக்கு குடிநீர் வசதி இல்லை. நாங்கள் பலமுறை மனு கொடுத்தும், எந்த பலனும் இல்லை. இதனால் நாங்கள் வேறு பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இது பற்றி ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே நாங்கள் வேறு வழியின்றி மறியலில் ஈடுபட்டோம், என்று கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து இன்ஸ்பெக்டர், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், பொதுமக்களிடத்தில் கோரிக்கையை கேட்டு உடனடியாக குடிநீருக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story