கோவில்களில் தரிசனத்துக்கு தடை; வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு


கோவில்களில் தரிசனத்துக்கு தடை; வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 3 Aug 2021 3:10 AM IST (Updated: 3 Aug 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பெரம்பலூர்:

பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிடலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
தற்போது ஆடி மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் வருகிற 8-ந்தேதி ஆடி அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதற்கு ஆறு மற்றும் நீர்நிலைகளில் அதிகளவில் கூடுவார்கள். இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேற்று முதல் வருகிற 8-ந் தேதி வரை தடை விதித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
பூஜைகள் நடந்தன
அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில், கச்சேரி பிள்ளையார் கோவில், பாலமுருகன் கோவில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறை அபராதரட்சகர் கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், எசனை வேணுகோபால சுவாமி கோவில், காட்டு மாரியம்மன் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் அர்ச்சகர்கள் ஆகம விதிகளின்படி பூஜைகள் செய்தனர்.
ஆனால் அந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று வழிபாடு செய்தனர். இதில் சில கோவில்களில் வெளியே கதவுகள் மூடப்பட்டு, உள்ளே பூஜைகள் நடத்தப்பட்டது.
பக்தர்கள் கூட்டம்
நேற்று ஆடி கிருத்திகை என்பதால் பெரம்பலூர் பாலமுருகன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர். ஆனால் அவர்கள் கோவிலின் உள்ளே சென்று சுவாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது.
பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டும், நேற்று திங்கட்கிழமை என்பதால் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் கோவிலின் உள்ளே சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கோவிலின் முன்பு சமூக இடைவெளி இல்லாமல் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story