உதவி கேட்பதுபோல் வீட்டுக்கு வரவழைத்து ரியல் எஸ்டேட் தரகரை சரமாரியாக தாக்கி நகை, பணம் பறிப்பு


உதவி கேட்பதுபோல் வீட்டுக்கு வரவழைத்து ரியல் எஸ்டேட் தரகரை சரமாரியாக தாக்கி நகை, பணம் பறிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 10:26 AM IST (Updated: 3 Aug 2021 10:26 AM IST)
t-max-icont-min-icon

பணம் உதவி கேட்பதுபோல் வீட்டுக்கு வரவழைத்து ரியல் எஸ்டேட் தரகரை சரமாரியாக தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான பெண் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெண்ணுடன் பழக்கம்
சென்னை அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர் திருமண நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்வதுடன், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலுக்கு சென்றபோது அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.இதற்கிடையில் அந்த பெண், தனது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாகவும், அதற்கு பணம் உதவி செய்யும்படியும் கேட்டார். இதற்காக செந்தில்குமார், ஆவடியை அடுத்த அண்ணாநகர் லட்சுமி நகர் முல்லை தெருவில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.

நகை-பணம் பறிப்பு
வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த 4 பேர், அந்த பெண்ணை காரில் ஏற்றி அனுப்பினர். பின்னர் அவர்கள், செந்தில்குமாரை நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோ எடுத்தனர். அத்துடன் அவரை கட்டை, கத்தி உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.பின்னர் செந்தில்குமார் அணிந்து இருந்த 15 பவுன் நகை, சட்டை பையில் இருந்த ரூ.13 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். அதன்பிறகு அவரது கண்ணை காட்டி காரில் ஏற்றி படப்பை அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

2 பேர் கைது
அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்த செந்தில்குமார், பின்னர் இதுபற்றி ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாபிராமை சேர்ந்த மெக்கானிக் அஜித் (24), ஆவடியை சேர்ந்த கார் 
டிரைவர் சரவணன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான பெண் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story