தொப்பூர் கணவாயில் லாரிகள் சரக்கு ஆட்டோ மோதி விபத்து


தொப்பூர் கணவாயில் லாரிகள் சரக்கு ஆட்டோ மோதி விபத்து
x
தினத்தந்தி 3 Aug 2021 8:36 PM IST (Updated: 3 Aug 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் லாரிகள், சரக்கு ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் லாரிகள், சரக்கு ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார்.
லாரி மோதி விபத்து
குஜராத்தில் இருந்து எள்ளு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை  சேர்ந்த டிரைவர் ரத்தினம் (வயது 67) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக நாமக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவர் உடன் வந்தார். 
தொப்பூர் இரட்டைப்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் பாமாயில் பாரம் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் சேலம் மாவட்டம் குஞ்சான்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தில்முருகன் (49) படுகாயமடைந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கி தவித்த ஆட்டோ டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story