விரைவு ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்


விரைவு ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2021 9:58 PM IST (Updated: 3 Aug 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி-தேனி இடையே விரைவு ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

தேனி: 

மதுரை-போடி இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், மதுரை-ஆண்டிப்பட்டி வரை ரெயில் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 

இதையடுத்து ஆண்டிப்பட்டி-தேனி இடையே தண்டவாள இணைப்பை சரிபார்க்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. 

மிகக் குறைவான வேகத்தில் இந்த ரெயில் என்ஜின் ரெயில்வே தண்டவாளத்தில் பயணித்தது. அதன்பிறகு ரெயில்வே பாதை பணிகள் தீவிரமாக நடந்தன. 

தேனி வரை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ரெயில் பாதையை பெங்களூரு தென்சரக முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளார். விரைவில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளனர். அதற்கு முன்பாக ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை விரைவு ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) இந்த சோதனை ஓட்டம் நடக்கிறது. 


இதற்காக மதுரையில் இருந்து ரெயில் என்ஜின் இன்று காலையில் ஆண்டிப்பட்டி ரெயில் நிலையத்துக்கு வருகிறது. அங்கிருந்து காலை 11 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்குகிறது. ரெயில்பாதையில் 80 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடக்கிறது. 

எனவே, சோதனை ஓட்டம் நடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் ரெயில்பாதை அருகில் செல்லவோ, ரெயில்பாதையை கடக்கவோ கூடாது என்று ரெயில்வே துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 


அதுபோல், ரெயில்பாதை அருகில் மக்கள் செல்லாமல் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார்.


Next Story