ஆடிப்பெருக்கையொட்டி பழனி சண்முகநதிக்கு தடையை மீறி வந்த பொதுமக்கள்; போலீசார் திருப்பி அனுப்பினர்
ஆடிப்பெருக்கையொட்டி பழனி சண்முகநதிக்கு தடையை மீறி வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பழனி:
ஆடிப்பெருக்கையொட்டி புண்ணிய நதிகளில் பொதுமக்கள் வழிபாடு செய்வது வழக்கம். அதேபோன்று பழனி சண்முகநதியில் கன்னிமார் பூஜை, ஆறு வழிபாடு, முன்னோர் வழிபாட்டை பக்தர்கள் மேற்கொள்வார்கள். மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு நடத்துவார்கள். இதனால் ஆடிப்பெருக்கு தினத்தில் சண்முகநதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆனால் தற்போது கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில், நீர்நிலைகளுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி, பழனி சண்முக நதியில் பொதுமக்கள் வழிபாடு செய்ய போலீசார் தடை விதித்தனர். மேலும் நேற்று நதி கரையோரம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் சிலர் சண்முகநதியில் வழிபாடு செய்வதற்காக வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் உள்ள தலையூத்து அருவியிலும் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story