தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி


தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி
x
தினத்தந்தி 3 Aug 2021 10:36 PM IST (Updated: 3 Aug 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

தற்கொலை முயற்சி சம்பவம் அதிகரிப்பதால் தீவிர சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகா சிறுவள்ளிக்குப்பத்தை சேர்ந்த 8 பேரின் குடும்பத்தை சேர்ந்த 20 பேர், தங்கள் வீடுகளை காலி செய்ய சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 26-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். 
இதேபோல் வீடு கட்ட விடாமல் தடுத்து மிரட்டி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாமாத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேரும், ஊதியம் வழங்காததை கண்டித்து ஆலாத்தூரை சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இந்த தற்கொலை முயற்சி சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

கலெக்டர் அலுவலகம் மற்றும் பெருந்திட்ட வளாகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதிலும் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் நேற்று முதல் கலெக்டர் அலுவலகம் மற்றும் பெருந்திட்ட வளாக பகுதிகளில் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

தீவிர சோதனை 

இவர்கள் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் மற்றும் பின்புற வாயில் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். அதுபோல் கலெக்டர் அலுவலகம் முன்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு வந்த பொதுமக்களையும் தீவிரமாக சோதனை செய்த பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

Next Story