மஞ்சூர் அருகே காட்டுப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை
மஞ்சூர் அருகே காட்டுப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே காட்டுப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தை சாவு
மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளன. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, கரடி காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் குடியிப்புக்குள் புகும் சிறுத்தை, புலி ஆகியவை பொதுமக்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொன்றும் வருகின்றன.
இந்த நிலையில் மஞ்சூர் அருகில் உள்ள சிவசக்தி நகர் அருகில் உள்ள காப்புக்காட்டில் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனவர் ரவி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுத்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
வனத்துறையினர் விசாரணை
பின்னர் இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் குருசாமி, கால்நடை மருத்துவர்கள் நந்தினி, விநாயகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து சிறுத்தையின் உடலை அங்கே தகனம் செய்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இறந்த சிறுத்தைக்கு 10 வயது இருக்கும். சிறுத்தை நோய் வாய்ப்பட்டு இறந்ததா அல்லது வனவிலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து இறந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். இதுகுறித்து தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story