சிறப்பு டி.ஜி.பி. 9-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு டி.ஜி.பி. வருகிற 9-ந் தேதி நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம், ஆக.4-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதோடு இந்த விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த புகார் தொடர்பாக சாட்சிகள் பலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேலும் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 29-ந் தேதியன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகி, இச்சம்பவம் தொடர்பாக 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த பாலியல் தொந்தரவு வழக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து, வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும், கால அவகாசம் தேவைப்பட்டால் அவர் ஐகோர்ட்டை அணுகலாம் என்றும், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை டிசம்பர் 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
சிறப்பு டி.ஜி.பி. நேரில் ஆஜராக உத்தரவு
இதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கின் விசாரணை வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story