11-வது நாளாக முழு கொள்ளளவில் இருக்கும் சோலையாறு அணை


11-வது நாளாக முழு கொள்ளளவில் இருக்கும் சோலையாறு அணை
x
தினத்தந்தி 3 Aug 2021 10:49 PM IST (Updated: 3 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மழை குறைந்த நிலையிலும், 11-வது நாளாக சோலையாறு அணை முழு கொள்ளளவில் இருக்கிறது. இதனால் தேயிலை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

வால்பாறை

வால்பாறையில் மழை குறைந்த நிலையிலும், 11-வது நாளாக சோலையாறு அணை முழு கொள்ளளவில் இருக்கிறது. இதனால் தேயிலை தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. 

சோலையாறு அணை 

வால்பாறை அருகே சோலையாறு அணை உள்ளது. 160 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 165 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 

பின்னர் கடந்த 24-ந் தேதி முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பி 164 அடியை தாண்டியது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால், கேரளாவுக்கு திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

11 நாட்களாக முழு கொள்ளளவு 

அணை நிரம்பி உள்ளதால், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீர் கடல்போல காட்சியளிக்கிறது. மேலும் கடந்த 24-ந் தேதி முதல் தற்போது வரை 11 நாட்களாக அணை முழு கொள்ளளவிலேயே நீடித்து வருகிறது. 

தற்போது அணையின் நீர்மட்டம் 161.11 அடியாக உள்ளது. இதன் காரணமாக நீர்த்தேக்க பகுதியான சேடல்டேம் பகுதியில் குடியிருப்பு பகுதி மற்றும் உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்களையும் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. 

மீண்டும் மழை 

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை நின்று இருந்தது. தற்போது மீண்டும் மழை தொடங்கியதுடன், விட்டு விட்டு லேசாக பெய்து வருகிறது. ஏற்கனவே சோலையாறு அணை நிரம்பி விட்டதால், அணையில் இருந்து சமவெளி பகுதி விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த மழையளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:- 

வால்பாறை 10 மி.மீ., சோலையாறு அணை 10, நீராறு 11,  மேல் நீராறு 13 மி.மீ. மழை பெய்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத் தக்கது. 


Next Story