கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. பிரமுகர் உள்பட 17 பேர் மீது வழக்கு
செஞ்சி அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் கலைதாசன் மகன் வேணுகோபால்(வயது 25). இவருக்கும், பக்கத்து கிராமமான கிருஷ்ணன் புறவடையை சேர்ந்த விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளர் சந்திரபாபு(35) என்பவருக்கும் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணன் புறவடை கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் வேணுகோபால் தரப்பை சேர்ந்த காமராஜ் என்பவர் ஆடு வெட்டி பிரியாணி சமைத்து, பக்தர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார்.
இரு தரப்பினர் மோதல்
அப்போது சந்திரபாபு, தனது மனைவி கவிதாவுடன் கோவிலுக்கு வந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த ஒருவரை சந்திரபாபு தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வேணுகோபால் தரப்பினர் சந்திரபாபுவையும், அவரது மனைவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்ததும் இரு தரப்பினரும் கோவிலில் ஒன்று திரண்டு ஒருவரையொருவர் கட்டையாலும், கையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த சந்திரபாபு, விஜய், கலைவாணன், வேணுகோபால் ஆகிய 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
17 பேர் வழக்கு
இது குறித்து இருதரப்பினரும் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் வேணுகோபால், விஜய், கலைவாணன், மதிவாணன், முருகன், சிவா, விஜய்சங்கர், பாவேந்தர், லட்சுமணன், சந்திரபாபு, பசும்பெருமாள், ரமேஷ் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story