4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி


4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 3 Aug 2021 11:35 PM IST (Updated: 3 Aug 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிப்பாளையம்:
ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பழனி(வயது 43). இவரது மனைவி பிரபாவதி(33). பழனியின் சகோதரர் கந்தன்(40). இவரது மனைவி மகேஸ்வரி(30). கருப்பண்ணசாமி(32). இவரது மனைவி தாமரைச்செல்வி(28), இவர்களது உறவினர் அசோக்(26), இவரது மனைவி திலகவதி(20). இந்த 4 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 16 பேர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். 
கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்கள், தாங்கள் கேனில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய்யை திடீரென தங்களது உடலில் ஊற்றி தீவைத்து கொள்ள முயற்சி செய்தனர். 
தண்ணீரை ஊற்றினர்
இதை அங்கு நின்ற கலெக்டர் அலுவலக பணியாளர் உட்பட பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீப்பெட்டியை தட்டி விட்டு அங்கு நின்ற மற்ற பணியாளர்களை அழைத்தனர். சத்தம் கேட்டு மற்ற பணியாளர்கள் அங்கு வந்தவுடன் அவர்கள் அனைவரும் சேர்ந்து அங்குள்ள குடிநீர் குழாயில் இருந்து தண்ணீரை எடுத்து அவர்கள் மீது ஊற்றினர். 
இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களை சமாதானம் செய்து பழனியிடம் விசாரணை நடத்தினர். 
மனைவிைய பிரிந்து வாழ்ந்தார்
விசாரணையில், பழனியின் சகோதரர் முத்து(38), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த முத்து, விடுமுறை காலங்களில் மட்டும் சாமந்தான்பேட்டைக்கு வந்து செல்வார். இதில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முத்து தனது மனைவி பிரியாவை விட்டு பிரிந்து வாழ்ந்தார். 
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்
இந்த நிலையில் சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தார்கள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பிரியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.16 லட்சம் அபராத தொகையை முத்து செலுத்த வேண்டும் என பஞ்சாயத்தார் தெரிவித்தனர். 
இந்த நிலையில் திடீரென முத்து தலைமறைவானார். கடந்த 2 மாத காலமாக பல இடங்களில் தேடியும் முத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பஞ்சாயத்தார்கள் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களையும்(பழனி) எனது சகோதரர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், எனது உறவினர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
போலீசில் புகார் 
ஊரை விட்டு ஒதுக்கி வைத்து 16 நாட்கள் ஆன நிலையில் எங்களால் எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களது குழந்தைகள் ஒருவேளை உணவிற்கே கஷ்டப்படுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
காணாமல் போன எனது சகோதரர் முத்துவிற்கும் எங்களது குடும்பத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும் போது எங்களது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது சரியில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த காரணத்தால் வேலைக்கு செல்ல முடியாமல் சாப்பிட வழியின்றி கஷ்டப்பட்டு வருகிறோம். சாப்பிட கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வாழ்வதை விட தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து 4 குடும்பங்களையும் சேர்ந்த 16 பேர் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தோம். 
அப்போது இங்கு இருந்த பணியாளர்கள் எங்களை தடுத்து விட்டனர். எனவே எங்களை ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 
பரபரப்பு
கலெக்டர் அலுவலகத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story