குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும்
குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் எனவும் பாதிக்கப்படுபவர்கள் வசிக்க 800 வீடுகள் தயாராகி வருவதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
குடியாத்தம்
குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் எனவும் பாதிக்கப்படுபவர்கள் வசிக்க 800 வீடுகள் தயாராகி வருவதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
ஆற்றை ஆக்கிரமிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் கவுண்டன்ய மகாநதி செல்கிறது கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஆற்றின் இருபக்கமும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அதில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர்.
மேலும் கவுண்டன்யமகாநதி ஆற்றில் செடி, கொடிகள், முட்புதர்கள் பெருகி உள்ளன. இதனை அகற்ற கோரியும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இந்த நிலையில் அதிகாரிகளுடன் வேலூர் மாவட்ட கலெக்டர் பெ.குமாரவேல்பாண்டியன் நேற்று குடியாத்தம் வந்தார்.
அப்போது குடியாத்தம் கவுண்டன்யமகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள காமராஜர் பாலம் பகுதியில் இருந்தும், கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியிலிருந்தும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது குடியாத்தம் வி.அமலுவிஜயன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், நீர்வள ஆதாரத் துறையின் வேலூர் மாவட்ட செயற்பொறியாளர் ரமேஷ், தாசில்தார் எஸ்.லலிதா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாற்று இடத்தில் 800 வீடுகள்
ஆய்வைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
குடியாத்தம் நகராட்சி பகுதியில் உள்ள கவுண்டன்யமகாநதி ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள் அகற்றப்படும் அவர்களுக்காக 800 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
வெளியேற்றப்படுபவர்கள் அந்த வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள். மேலும் கவுண்டன்யமகாநதி தெற்கு மற்றும் வடக்கு பகுதி கரைகளில் தடுப்பு சுவர்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பின் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க இந்த சுவர்கள் கட்டப்பட உள்ளன.
சுத்திகரிப்பு நிலையம்
குடியாத்தம் நகராட்சி பகுதியில் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது இதில் இருந்து 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கழிவு நீராக வெளியேறுகிறது கழிவுநீரை சுத்திகரிக்க பாதாளசாக்கடை திட்டம் இல்லாமல், கழிவுநீர் கால்வாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்திகரிக்கும் வகையில் திட்டங்கள் தயாரிக்க குடியாத்தம் நகராட்சி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story