100 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட துரியோதனனின் மண் சிலை
பரமத்திவேலூரில் கதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 100 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட துரியோதனனின் மண் சிலையை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் போன்று வேடமணிந்து கதை பாடி, பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கதை பாடும் நிகழ்ச்சி நடந்தது.
இறுதி நாளான ஆடி மாதம் 18-ந் தேதி அன்று துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்காக மாரியம்மன் கோவில் முன்பு சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஏராளமானவர்கள் இதனை கண்டு ரசித்தனர்.
கதையின் நிறைவாக துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை திரவுபதி முடியில் தடவிய பின்னர் முடியை முடிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடந்தது.
விழா ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் மகாபாரத கதை பாடும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இளைஞர்கள் வேடமணிந்து நடிப்பதற்கு தயக்கம் காட்டி வந்தனர். தற்பொழுது இளைஞர்கள் தாங்களே ஆர்வமுடன் வந்து பஞ்சபாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் போன்று வேடமணிந்து போட்டி போட்டு நடித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story