கொரோனா கட்டுப்பாடுகளால் கும்பகோணத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா புதுமண தம்பதிகள் காவிரி தாய்க்கு ஆரத்தி காட்டி வழிபாடு


மஞ்சள் கயிறு அணிந்து கொள்ளும் பெண்கள்.
x
மஞ்சள் கயிறு அணிந்து கொள்ளும் பெண்கள்.
தினத்தந்தி 4 Aug 2021 1:00 AM IST (Updated: 4 Aug 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா கட்டுப்பாடுகளால் கும்பகோணத்தில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. புதுமண தம்பதிகள் காவிரி தாய்க்கு ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினர்.

கும்பகோணம்:-

கொரோனா கட்டுப்பாடுகளால் கும்பகோணத்தில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. புதுமண தம்பதிகள் காவிரி தாய்க்கு ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினர். 

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு விழா ஆடி மாதத்தின் 18-ம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் போது காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் வழிபாடு நடத்தி, மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள். கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆறு படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. 
இந்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் இருப்பதால் நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. கும்பகோணத்தில் வழக்கமாக ஆடிப்பெருக்கு அன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மகாமகம் குளம், பகவத்படித்துறை, டபீர் படித்துறை, அரசலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன் காரணமாக தடை செய்யப்பட்ட நீர் நிலைகளை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள ஆற்றுப்படித்துறைகளில் மக்கள் ஆடிப்பெருக்கு வழிபாடுகளை செய்தனர்.

சுமங்கலி பெண்கள்

புதுமண தம்பதிகள் தாங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மணமாலையை ஆற்றில் விட்டு காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். சுமங்கலிப்பெண்கள் ஒருவருக்கு ஒருவர் குங்குமம் இட்டு மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.
ஆடிப்பெருக்கு அன்று சிறுவர்கள் சப்பரங்களில் சாமியை வைத்து வழிபட்டு, அதை ஆற்றிலிருந்து தங்களுடைய வீட்டிற்கு இழுத்து வந்து விளையாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிறுவர்கள் சப்பரங்களை இழுத்துவர முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கும்பகோணம் அருகே உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் கூட்டமாக செல்லாமல் தனித்தனியாக சென்று வழக்கம்போல காவிரி அன்னைக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். 

களையிழந்தது

ஆடிப்பெருக்கு என்றாலே கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துறைகளில் பெண்கள் கூட்டம் கூட்டமாக நின்று வழிபாடு செய்வார்கள். இதன் காரணமாக விழா களைகட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஆடிப்பெருக்கு விழா நேற்று களையிழந்து காணப்பட்டது. 

திருவிடைமருதூர்

திருவிடைமருதூரில் காவிரி ஆற்றங்கரை பகுதியில் கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டு போலீசார் சார்பில் ஆற்றின் கரையோரம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் தடையை மீறி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு வழிபாடுகளை செய்தனர். 
திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அருள்பாலித்து வரும் பிரகத் சுந்தர குஜாம்பிகை அம்மன், ஆடிப்பெருக்கு விழா நாளில் வீதி உலாவாக காவிரியில் எழுந்தருள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக நேற்று பிரகத் சுந்தர குஜாம்பிகை அம்மன் காவிரி ஆற்றில் எழுந்தருளவில்லை. கோவில் வாசலில் உள்ள காருண்யாமிர்த தீர்த்தத்தில் எழுந்தருளினார். அப்போது திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் அம்பலவாண சுவாமிகள் முன்னிலையில் கங்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story