பெட்டிக்கடைக்காரர் வீட்டில் போலீஸ் எனக்கூறி பணம் திருடியது அ.தி.மு.க. பெண் பிரமுகர்
களக்காட்டில் பெட்டிக்கடைக்காரர் வீட்டில் பட்டப்பகலில் போலீஸ் எனக்கூறி பணம் திருடியது அ.தி.மு.க. பெண் பிரமுகர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். அவருடைய மனைவி நாகூர்மீராள் (வயது 53). இவர் வீட்டுடன் சேர்ந்து, பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பகலில் அவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னலில் வைத்து விட்டு, வெளியில் சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட பெண் ஒருவர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று அங்கு உள்ள ஒரு டப்பாவில் வைக்கப்படிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடியுள்ளார்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, நாகூர்மீராள் வந்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் சுதாரித்து கொண்டு, நான் போலீஸ் என்று கூறி உள்ளார். மேலும் நீங்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததால், வீட்டை சோதனை போட வந்தேன் என்றும் தெரிவித்தார். பின்னர் அந்த பெண் நைசாக அங்கிருந்து நழுவி வீட்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டில் ஏறி சென்று விட்டார்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று நாகூர்மீராள் பார்த்தபோது, டப்பாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, களக்காடு நடுத்தெருவை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான ஐஸ்வர்யா என்பவர் போலீஸ் என நாடகமாடி நாகூர் மீராள் வீட்டில் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story