நெல்லையில் ஒரே நாளில் 5,280 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி


நெல்லையில் ஒரே நாளில் 5,280 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி
x
தினத்தந்தி 4 Aug 2021 2:40 AM IST (Updated: 4 Aug 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 5,280 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டதால் பணி பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கோவிஷீல்டு போதுமான அளவுக்கு கிடைத்து வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கோவேக்சின் மருந்து கிடைக்காததால் அந்த தடுப்பூசி போட விரும்புவோர் ஏமாற்றம் அடைந்தனர். இதுதவிர ஏற்கனவே முதல் தவணையாக கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த வாரம் கோவேக்சின் மருந்து கொண்டு வரப்பட்டு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் நெல்லை மாவட்டத்துக்கு கோவேக்சின் தடுப்பூசி வந்தது. இதையொட்டி நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 5,280 தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லையில் சந்திப்பு மேலவீரராகவபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 600 தடுப்பூசி, பெருமாள்புரம் 800, பேட்டை 120, பாட்டப்பத்து 130, மேலப்பாளையம் 30, பழையபேட்டை 70 என நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல் புறநகர் மாவட்டத்தில் திருக்குறுங்குடி, முக்கூடல், உக்கிரன்கோட்டை, வைராவிகுளம், முனைஞ்சிப்பட்டி, திசையன்விளை, பணகுடி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இதில் முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் 2-வது தவணையாக தடுப்பூசி போடப்பட்டது.

Next Story