ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. வெள்ளாற்றங்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்.
பெரம்பலூர்:
சிறப்பு வழிபாடு
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை ஏற்படுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் 8 நாட்களுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பெரம்பலூர் நகரில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி உள்ள புகழ்பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில், தடை உத்தரவு காரணமாக கோவிலுக்கு வெளியே நுழைவு வாயிலில் உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு நேற்று எளிமையாக பூஜைகள் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கம்பத்து ஆஞ்சநேயருக்கு பால், பழ வகைள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக்கொண்டு திருமஞ்சன உற்சவம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து ஆஞ்சநேருக்கு பித்தளை கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. திருமஞ்சனத்தை கோவில் பட்டர் பட்டாபிராமன் நடத்தினார். இதில் கோவில் முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன், வெள்ளந்தாங்கி அம்மன்கோவில் பரம்பரை தர்மகர்த்தா தர்மராஜ், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கீற்றுக்கடை குமார் உள்பட குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். வழக்கமாக ஆடிப்பெருக்கு விழா களைகட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தெற்குத்தெரு, எடத்தெரு, பூசாரித்தெரு, செக்கடித்தெரு, அண்ணாநகர், மதனகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் 70-க்கும் மேற்பட்டவர்கள் காவிரி ஆற்றில் இருந்து பாடாலூர், சிறுவாச்சூர் வழியாக புனிதநீரை பாதயாத்திரையாக எடுத்து வந்து, கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிசேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு தங்களது வீடுகளுக்கு புனிதநீரை எடுத்துச் சென்றனர்.
மங்களமேடு
மங்களமேட்டை அடுத்துள்ள வெள்ளாற்றின் கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருமணமாகாத கன்னிப்பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு வழிபாடும், திருமணமான பெண்கள் தங்களுடைய தாலி கயிற்றை புதிதாக மாற்றியும் சடங்குகளை செய்தார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை புதுமண தம்பதியினர் ஆற்றில் விட்டனர். அகரம்சீகூர், ரெட்டிக்குடிக்காடு, வசிஷ்டபுரம், கிராமங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தனர். இதேபோல் சு.ஆடுதுறை வெள்ளாற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடிய பெண்கள் அருகில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவில் ஊரடங்கு காரணமாக திறக்கப்படாததால், கோவிலின் வெளியே தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட்டனர். வெள்ளாற்றின் கரையில் சப்த துறைகள் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை உள்ளிட்ட கிராமங்களில் பெண்கள் குடும்பம், குடும்பமாக வந்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
பாடாலூர்
பாடாலூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மழை பெய்ய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கரகம் தூக்குதல் நிகழ்ச்சி நாட்டார்மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் கரகத்தை தலையில் சுமந்தபடியே செட்டிகுளம் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி கோவிலின் மலை அடிவாரத்தில் உள்ள பஞ்சநதி தெப்பக் குளத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தவாறு நாட்டார்மங்கலம் கிராமத்தில் முக்கிய வீதி வழியாக சென்று செல்லியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story