கொரோனா பரவலை தடுக்க பக்தர்களுக்கு தடை: மேட்டூரில் களை இழந்த ஆடிப்பெருக்கு விழா


கொரோனா பரவலை தடுக்க பக்தர்களுக்கு தடை: மேட்டூரில் களை இழந்த ஆடிப்பெருக்கு விழா
x
தினத்தந்தி 4 Aug 2021 3:22 AM IST (Updated: 4 Aug 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க காவிரி ஆற்றங்கரையில் பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால், மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்பட்டது.

மேட்டூர்:
கொரோனா பரவலை தடுக்க காவிரி ஆற்றங்கரையில் பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால், மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழா
காவிரி பாய்ந்தோடும் மேட்டூரில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகாலையில் இருந்தே மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் கூடுவார்கள்.
பின்னர் அவர்கள் காவிரியில் புனித நீராடிவிட்டு, அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். அப்போது பக்தர்கள் சிலர் ஆடு, கோழிகளை முனியப்பசாமிக்கு பலியிட்டு பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். 
பிறகு தாங்கள் சமைத்த உணவை மேட்டூர் பூங்காவிற்கு எடுத்துச்சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்வார்கள். மேலும் சிறுவர், சிறுமிகள் அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி பொழுதை இன்பமாய் கழிப்பார்கள்.
தடை
இதன் காரணமாக மேட்டூர் காவிரி ஆற்றுப்படுகை, அணைக்கட்டு முனியப்பன் கோவில், பூங்கா ஆகிய இடங்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் காட்சியளிக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் காணப்படும் காட்சியாகும்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
வெறிச்சோடியது
இதன்படி ஆடிப்பெருக்கு தினமான நேற்று மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடவும், அணைக்கட்டு முனியப்பன் சாமி கோவிலில் தரிசனம் செய்வதற்கும், மேட்டூர் பூங்காவிற்கு உள்ளே செல்லவும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராடும் படித்துறை அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் தடுப்பு வேலி அமைத்து யாரும் உள்ளே செல்லாதவாறு கண்காணித்தனர்.
இதேபோன்று பூங்கா நுழைவுவாயில், அணைக்கட்டு முனியப்பன் கோவில் நுழைவுவாயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக முனியப்பன் கோவில், ஆற்றங்கரை, பூங்கா போன்ற இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தீவிர கண்காணிப்பு
மேலும் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மேட்டூர் நகரத்தில் நுழைவு வாயில் பகுதியான 16 கண் பாலம், சேலம் கேம்ப், தங்கமாபுரிபட்டணம், மேட்டூர் அனல்மின் நிலைய நால்ரோடு, குள்ளவீரம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆடிப்பெருக்கு விழா அன்று மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் மேட்டூர் நகரம் நேற்று மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது.

Next Story