தலைவாசல் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த கணவன்-மனைவி சாவு
தலைவாசல் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த கணவன்-மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த கணவன்-மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கணவன், மனைவி
தலைவாசல் அருகே சாமியார்கிணறு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி (வயது 77). இவருடைய மனைவி முத்தம்மாள் (72). இவர்களுக்கு சுந்தரம், சிவகுமார், செல்வராஜ் ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரம் துப்பாக்கி குண்டு பட்டு இறந்தார். சிவகுமார் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், செல்வராஜ் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி காலை 8 மணிக்கு உடல் நிலை சரியில்லாத தனது மனைவி முத்தம்மாளை, மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, சின்னசாமி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது தேவியாக்குறிச்சி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கசென்றுள்ளார். இதற்காக சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சின்னசாமி, முத்தம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சாவு
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முத்தம்மாள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், சின்னசாமி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு சின்னசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இரவு முத்தம்மாளும் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்தில் சிக்கி, 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கணவன்-மனைவி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் உடல்களை பார்த்து மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் 2 பேரின் உடல்களும் ஒரே தகன மேடையில் வைத்து எரித்தனர்.
வழக்குப்பதிவு
விபத்து குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வராஜ் (வயது 27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story