கொரோனா தடையால் கோவில்களில் களையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடையால் ஆடிப்பெருக்கு தினத்தன்று சென்னை கோவில்கள் களையிழந்து காணப்பட்டன. பெண்கள் கடற்கரையில் வைத்து மஞ்சள் தாலியை பிரித்து கட்டினர்.
சென்னை,
‘நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. அந்த வகையில் புதுவெள்ளம் பொங்கி வரும் காவிரி தாயை கர்ப்பிணி பெண்ணாக பாவித்து, அந்த கர்ப்பிணித்தாய் வயல்வெளிகளில் பாய்ந்து ஓடி, நல்ல விளைச்சலை அறுவடை செய்ய வழி வகுப்பாள் என்பது ஐதீகம். இதனை கொண்டாடும் வகையில், வெற்றியை குறிக்கும் ஆடி மாதம் 18-ந் தேதியான, ஆடிப்பெருக்கு அன்று பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போன்று, காவிரித் தாய்க்கு வளையல்கள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, புது துணி, வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிவற்றை படைத்து காவிரி ஆற்றில் கலக்க விடுவதே ஆடிப்பெருக்கு நாளின் உன்னத நோக்கம் ஆகும்.
இந்த நன்னாளில் பெண்கள் தங்கள் கணவர்கள் எல்லா வளமும் பெற்று தீர்க்க ஆயுசுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் தாலி கயிற்றை பிரித்து அணிவது வழக்கம். அதிலும் குறிப்பாக புதிதாக திருமணமான பெண்கள் மஞ்சள் தாலி கயிற்றை பிரித்து அணிவதுடன், தாங்கள் விரைவில் கருவுற்று குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று காவிரித் தாயை வணங்கி கைகளில் வளையல் அணிந்து கொள்வதுடன், வளையல்களை ஆற்றில் ஓட விடுவதும் ஐதீகம்.
அதன்படி, சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் தெப்பக்குளக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், இந்த ஆண்டு கோவில் தெப்பக்குளக்கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்கள் பெரிதாக நடைபெறவில்லை. இதனால் சென்னை கோவில்கள் ஆடிப்பெருக்கையொட்டி களையிழந்து காணப்பட்டன.
அதே நேரத்தில், சென்னை மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆங்காங்கே பெண்கள் மஞ்சள் தாலி பிரித்து கட்டிக் கொண்டனர். இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூரை பூர்வீகமாக கொண்ட சென்னை பெண்கள் அபிராமி, மனோகரி ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் 20 ஆண்டுக்கும் மேலாக ஸ்ரீரங்கம் அல்லது திருச்சி அம்மா மண்டபம் பகுதிகளுக்கு சென்று இந்த சடங்கு சம்பிரதாயங்களை செய்து வந்தோம். இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இங்கு (பட்டினப்பாக்கம் கடற்கரை) வந்து, எங்கள் கணவர்மார்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று கடற்கரையில் வைத்து தாலி பிரித்து கட்டிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story