கொரோனா தொற்றை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்
கொரோனா தொற்று பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று தர்மபுரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
தர்மபுரி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று தர்மபுரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா தொற்றை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அதிகாரிகள், செவிலியர்கள், கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். செவிலியர்கள் பங்கேற்ற கைகழுவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கைகளை கழுவும் முறைகள் குறித்து செவிலியர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
முக கவசம்
நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
கொரோனா தொற்றை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். தொற்று பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் சரியாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story