அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, புலியை பிடிக்கக்கோரி கிராம மக்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த கிராமத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
கூடலூர்
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, புலியை பிடிக்கக்கோரி கிராம மக்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த கிராமத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
காத்திருப்பு போராட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1 பகுதியில் ஊருக்குள் புலி புகுந்து அட்டகாசம் செய்தது. எனவே அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை.இந்த நிலையில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமையிலான அதிகாரிகள், போலீசார் கிராம மக்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வயதான புலி என்பதால் இரை கிடைக்காத சமயத்தில் பொதுமக்களை தாக்க வாய்ப்புள்ளது என்று அச்சம் தெரிவித்தனர்.
புலியை பிடிக்க ஆலோசனை
பின்னர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கூறியதாவது:- கிராம மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வனத்துறையினர் இரவு, பகலாக ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
மேலும் புலி நடமாட்டம் முடிவுக்கு வரும் சமயம் வரை கிராம மக்கள் தங்களது கால்நடைகளை திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம். தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே பணியாற்ற வேண்டும். புலியை பிடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே போராட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பணிக்கு திரும்பினர்
இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதன்படி நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல தோட்ட தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு சென்றனர். மேலும் கிராம மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு திரும்பினர்.
இதேபோல் கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியை சுற்றி ரோந்து சென்றனர். தொடர்ந்து தேயிலை தோட்டங்களுக்குள் புலி நடமாட்டம் உள்ளதா என கண்காணித்தனர். மேலும் இரவில் வன ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story