திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் செயலி மூலம் கணக்கெடுப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளை செல்போன் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்மூலம் 6 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களில் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறியப்பட்டு உரிய பயிற்சி அளித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட உள்ளனர்.
அதோடு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளும் கணக்கெடுக்கப்பட இருக்கின்றனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியில் ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என மொத்தம் 200 பேர் ஈடுபட உள்ளனர். இவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்துவார்கள்.
இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் விடுபடாமல் இருப்பதற்கு வசதியாக கணக்கெடுப்புக்கு தனியாக செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து செயலில் பதிவு செய்ய வேண்டும்.
இதனால் சம்பந்தப்பட்ட பகுதி செயலியில் பதிவாகி விடும்.
அதேபோல் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிக்கு பாடப்புத்தகங்கள் வாங்குவதற்கு வராத மாணவர்களின் விவரங்களை சேகரித்து கள ஆய்வு செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து பயில வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, பள்ளி செல்லாத குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக வட்டார வளமையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.
Related Tags :
Next Story