திண்டுக்கல்லில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
திண்டுக்கல்லில் தனியார்மயமாக்குவதை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
ஓரியண்டல் நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா, நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை சேர்ந்த 20 கிளைகள் உள்ளன.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் என 200 பேர் நேற்று பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.2 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கவுதமன், இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் குணசேகரன், சந்தோஷ், முகவர் சங்க நிர்வாகி வெங்கடேஷ், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன், பொருளாளர் தனசாமி மற்றும் இன்சூரன்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story