விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி நடந்த மீன்பிடி திருவிழா போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு


விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி நடந்த மீன்பிடி திருவிழா போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 10:22 PM IST (Updated: 4 Aug 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடந்தது.பொது மக்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் தற்போது 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. 

பொதுப்பணித்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மீன் குத்தகை ஏலம் விடப்படும். அதன் பிறகு ஆடிப்பெருக்கு முடிந்து ஓரிரு நாட்களில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

மீன்பிடி திருவிழா

இந்நிலையில் இந்த ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன் குத்தகை ஏலம் முடிவடைந்த நிலையில், மீன்பிடி திருவிழா நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் உள்ளதால் மீன்பிடி திருவிழா நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது.


இந்த சூழலில் நேற்று திடீரென தடையை மீறி அந்த ஏரியில் கல்பட்டு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்  மீன்பிடி திருவிழாவை நடத்தினர். இதில் கல்பட்டு, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, தெளி, சிறுவாக்கூர், அருளவாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி ஏரிக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர். 

3 மணி நேரமாக...

கொரோனா பரவலை பற்றி சிறிதும் அச்சப்படாமலும், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை மறந்தும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்து அள்ளிச்சென்றனர். இந்த மீன்பிடி திருவிழா காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடந்த நிலையில், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார், கல்பட்டு ஏரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்குள்ள பொதுமக்களிடம், தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் ஊரடங்கை மீறி கூட்டமாக மீன்பிடி திருவிழாவை நடத்தக்கூடாது என்றும், உடனடியாக கலைந்து செல்லும்படியும் ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.

500 பேர் மீது வழக்குப்பதிவு

ஆனால் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் போலீசார், அந்த ஏரிக்குள் இறங்கி அவர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதாக கூறி, 500 பேர் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story