கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு செய்வதற்கான காலஅட்டவணை


கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு  செய்வதற்கான காலஅட்டவணை
x
தினத்தந்தி 4 Aug 2021 10:33 PM IST (Updated: 4 Aug 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு செய்வதற்கான காலஅட்டவணை வழங்கப்பட்டது.

வெள்ளியணை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் வெள்ளியணை அரசு தொடக்க பள்ளியும் மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பாடங்களை ஆசிரியர்கள் வீடியோ பதிவுகளாக பதிவு செய்து அதை வாட்ஸ்-அப் மூலம் ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் அனுப்பி வைக்கின்றனர். அப்படி அனுப்பி வைக்கப்படும் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பதை கேள்விகள் அடங்கிய வீட்டு பாடங்களை கொடுத்து அவர்களிடமிருந்து அதற்கான பதிலை வாட்ஸ்-அப் மூலம் பெற்று மாணவர்களின் கற்கும் திறனை மதிப்பிட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை அவர்களின் பெற்றோர்களை சந்தித்து நேரில் கேட்டறிந்தும் வருகின்றனர். ஸ்மார்ட்போன் வசதி இல்லாத மாணவர்கள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்க வலியுறுத்தி அம்மாணவர்களின் வீட்டிற்கு சென்று கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படும் நேரம் குறித்த அட்டவணையை வழங்கி அதை பார்த்து பாடங்களை கற்க வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று வெள்ளியணை வடக்கு தெருவிற்கு மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ், தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், ஆசிரியர் மனோகரன் ஆகியோர் சென்று கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் நேரங்கள் குறித்த அட்டவணையை வழங்கி மாணவர்கள் அவற்றை பார்க்க வேண்டும் என்றும் அதற்கு பெற்றோர்கள் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


Next Story