போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு டிக்டாக் பிரபல பெண் குடும்பத்தினருடன் தர்ணா தங்கை கணவரை கைது செய்யக்கோரி மனு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு டிக்டாக் பிரபல பெண் குடும்பத்தினருடன் தர்ணா தங்கை கணவரை கைது செய்யக்கோரி மனு
x
தினத்தந்தி 4 Aug 2021 10:45 PM IST (Updated: 4 Aug 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு டிக்டாக் பிரபல பெண் குடும்பத்தினருடன் தர்ணா செய்தார். பின்னர் தங்கை கணவரை கைது செய்யக்கோரி மனு கொடுத்தார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் லயா தர்மராஜ். இவர் ‘டிக்டாக்’கில் வீடியோ பதிவிட்டு பிரபலமானவர். நேற்று இவர், தனது தங்கை திவ்யா மற்றும் குடும்பத்தினருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
அப்போது அவர் கூறுகையில், எனது தங்கை, தனது கணவருடன் அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரம் பகுதியில் வசித்து வந்தார். அவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தங்கையின் கணவர், அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் மதுரையில் உள்ள பயிற்சி மையத்துக்கு சென்றார். அப்போது அங்கு படித்த திருமணமான ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக எனது தங்கைக்கும், அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 
இந்த நிலையில் வரதட்சணை கேட்டு எனது தங்கையை அவருடைய கணவர் துன்புறுத்தினார். அதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது தங்கை கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கோரிக்கை குறித்து மனு கொடுக்கும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் தங்கை கணவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லயா தர்மராஜ் மனு கொடுத்தார்.

Next Story