குடியாத்தத்தில் சான்றிதழ்கள் தராமல் அலைக்கழிக்கும் அதிகாரிகள். அரசு பள்ளி ஆசிரியர் புகார் மனு


குடியாத்தத்தில்  சான்றிதழ்கள் தராமல் அலைக்கழிக்கும் அதிகாரிகள். அரசு பள்ளி ஆசிரியர் புகார் மனு
x
தினத்தந்தி 4 Aug 2021 11:04 PM IST (Updated: 4 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் சான்றிதழ்கள் தராமல் அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் அரசு பள்ளி ஆசிரியர் புகார் மனு அளித்துள்ளார்.

வேலூர்

வாரிசு சான்றிதழ்

குடியாத்தம் தாலுகா செதுக்கரை ஜீவாநகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 56). இவர் உப்பரப்பல்லி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது மனைவி அமுதவல்லியுடன் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த மனு குறித்து அவர் கூறியதாவது:-

எனது தந்தைக்கு நான் உள்பட 6 பேர் வாரிசுதாரர்கள் உள்ளனர். எனது தந்தையின் சொத்துக்களை கடைசி வாரிசுதாரரான எனது தம்பி, நாங்கள் 5 பேரும் இறந்து விட்டதாக கூறி, அவரது பெயருக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி சொத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து எங்களுக்கு தெரியவரவே நாங்கள் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்தோம். ஆனால் எங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதில், எனது தந்தைக்கு நாங்கள் 5 பேரும் வாரிசுதாரர்கள் என்று கூறி உத்தரவிட்டது. எனினும் அதிகாரிகள் சான்றிதழ் தர மறுக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தநிலையில் எனது மகள், மகன் படிப்புக்காக அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக சான்றிதழ்கள் தர மறுக்கின்றனர்.
 
இதற்கு எனது தம்பியும் உடந்தையாக உள்ளார். அதிகாரிகள் அலைக்கழிப்பதால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story