நெல்லை டவுனில் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு போராட்டம்
நெல்லை டவுனில் வியாபாரிகள் நேற்று திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை டவுனில் உள்ள கடை வியாபாரிகளுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த பிரச்சினை காரணமாக நடைபாதை வியாபாரி ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், கடை உரிமையாளர், ஊழியர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் போலீசார் அந்த வழக்கை ரத்து செய்யவில்லை.
இதையடுத்து நெல்லை டவுன் வடக்கு ரதவீதி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், நேற்று காலையில் வியாபாரிகள் சுமார் ஒரு மணி நேரம் திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நேற்று காலை 9 மணிக்கு வழக்கமாக திறக்கப்படும் ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் இதர கடைகள் திறக்கப்படவில்லை. கடைகளின் முன்பு வியாபாரிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் சங்க தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ரமேஷ் சந்திரன், பொருளாளர் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது கடைகளின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காலை 10.30 மணி அளவில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு நெல்லை டவுன் வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story