நடுக்கடலில் விசைப்படகு தீப்பற்றி எரிந்தது


நடுக்கடலில் விசைப்படகு தீப்பற்றி எரிந்தது
x
தினத்தந்தி 5 Aug 2021 2:39 AM IST (Updated: 5 Aug 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் விசைப்படகு தீப்பற்றி எரிந்தது. படகில் இருந்த 14 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் விசைப்படகு தீப்பற்றி எரிந்தது. படகில் இருந்த 14 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மீன்பிடிக்க சென்றனர்
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதிகாலையில் செல்லும் விசைப்படகுகள் மீன்பிடித்து விட்டு இரவு கரைக்கு திரும்புவது வழக்கம்.
அதேபோல் நேற்று முன்தினம் கன்னியாகுமரியை சேர்ந்த சகாய அந்தோணி (வயது 59) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னமுட்டத்தை சேர்ந்த ஞான செல்வம் (49) தலைமையில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 
விசைப்படகு தீப்பிடித்தது
மீன்பிடித்துவிட்டு அன்றைய தினம் இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். விசைப்படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் கூட்டப்புளி அருகே வந்தது.
அப்போது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதே சமயத்தில் விசைப்படகு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து, தீயை அணைக்க முயற்சி செய்தனர். அந்த நேரத்தில் கடலில் காற்றும் பலமாக வீசியது. இதனால் தீ ‘மளமள’ வென படகு முழுவதும் பரவி எரிய தொடங்கியது. தீயை அணைக்க முடியாமல் மீனவர்களும் சிரமப்பட்டனர்.
நிலைமை விபரீதமானதை அறிந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பி செல்வது எப்படி? என தெரியாமல் செய்வதறியாது திகைத்தனர். அதே சமயம் அந்த வழியாக மீன்பிடித்து விட்டு கரையை நோக்கி மற்றொரு விசைப்படகு வந்தது. அதில் வந்த மீனவர்கள், படகு தீப்பிடித்து எரிவதை பார்த்ததும், அதன் அருகே விைரந்தனர். 
14 மீனவர்கள் உயிர் தப்பினர்
பின்னர் எரிந்து கொண்டிருந்த படகில் இருந்த மீனவர்களை, முதலில் மீட்கும் முயற்சியில் அவர்கள் இறங்கினர். அந்த படகில் இருந்த 14 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறிது நேரத்திற்குள் விசைப்படகு முழுவதும் எரிந்து நாசமாகி கடலில் மூழ்கியது.
பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சின்னமுட்டம் துறைமுகத்துக்கு வந்தனர். இந்த தீ விபத்து சம்பவ எதிரொலி காரணமாக நேற்று சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து எந்த விசைப்படகும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். நடுக்கடலில் விசைப்படகு தீப்பற்றி எரிந்த சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story