கர்நாடக புதிய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு
கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 29 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களின் வாழ்க்கை விவரங்களை காண்போம்.
பெங்களூரு: கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 29 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களின் வாழ்க்கை விவரங்களை காண்போம்.
ஈசுவரப்பா
சிவமொக்கா நகர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ஈசுவரப்பாவுக்கு 63 வயதாகிறது. பட்டப்படிப்பு படித்துள்ள அவர், மாணவர் பருவத்திலேயே பா.ஜனதா மாணவர் அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார். 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடினார். இதற்காக அவர் சில மாதங்கள் சிறையில் இருந்தார்.
1989, 1994-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல் முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1993-ம் ஆண்டு கர்நாடக பா.ஜனதா தலைவராக பணியாற்றிய அவர், 1995-ம் ஆண்டு 2-வது முறையாக தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2007-ம் ஆண்டு பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றினார். மீண்டும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு 4-வது முறையாக வென்றார். அப்போது அமைந்த பா.ஜனதா ஆட்சியில் மின்துறை மந்திரியாக பணியாற்றினார். அதன் பிறகு மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கர்நாடக பா.ஜனதா மாநில தலைவராக அவர் மீண்டும் பணியாற்றினார்.
2014-ம் ஆண்டு கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று, எடியூரப்பா மந்திரிசபையில் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பணியாற்றினார். 2012-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாகவும் செயல்பட்டார். இவர் குருப சமூகத்தை சேர்ந்தவர்.
கோவிந்த் கார்ஜோள்
1951-ம் ஆண்டு பிறந்த கோவிந்த் கார்ஜோளுக்கு 70 வயதாகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த அவர் 5-வது முறையாக கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். தற்போது பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தொகுதி எம்.எல். ஏ.வாக உள்ளார். சித்தராமையா ஆட்சி காலத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக பணியாற்றினார். முன்பு 2008-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, கன்னட வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு எடியூரப்பா மந்திரிசபையில் துணை முதல்-மந்திரியாகவும் இருந்தார். பொதுப்பணி, சமூக நலத்துறை இலாகாக்களை நிர்வகித்தார்.
பைரதி பசவராஜ்
பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளவர் பைரதி பசவராஜ். இவர் முதல் முறையாக கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு அதே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் சேர்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் கே.ஆர்.புரம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எடியூரப்பா மந்திரிசபையில் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றினார்.
எஸ்.டி.சோமசேகர்
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எஸ்.டி.சோமசேகர் பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவில் சேர்ந்த அவர் கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் யஷ்வந்தபுரம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு எடியூரப்பா மந்திரிசபையில் கூட்டுறவுத்துறை மந்திரியாக பணியாற்றினார். அவருக்கு 60 வயதாகிறது.
பி.சி.பட்டீல்
கர்நாடக சட்டசபைக்கு பி.சி.பட்டீல் 3-வது முறையாக இரேகெரூர் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். நடிகராக இருந்த பின்பு அரசியலுக்கு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், மந்திரி பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் அவர் இரேகெரூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு எடியூரப்பா மந்திரிசபையில் விவசாயத்துறை மந்திரியாக பணியாற்றினார். அவருக்கு 65 வயதாகிறது. நடிகர் ஆவதற்கு முன்பு அவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதாகர்
சிக்பள்ளாப்பூர் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஓராண்டுக்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு தாவினார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். எடியூரப்பா மந்திரிசபையில் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரியாக பணியாற்றினார். அவருக்கு 47 வயதாகிறது.
சிவராம் ஹெப்பார்
சிவராம் ஹெப்பார் கடந்த 2018-ம் ஆண்டு எல்லாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் எல்லாப்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.
சசிகலா ஜோலே
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நிப்பானி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, அவர் மந்திரியாக நியமிக்கப்பட்டார். பெண்கள்-குழந்தைகள் நலத்துறை மந்திரியாக பணியாற்றினார். அவருக்கு 52 வயதாகிறது.
மாதுசாமி
துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மாதுசாமி வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு அமைந்த எடியூரப்பா ஆட்சியில் மாதுசாமி சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரியாக பணியாற்றினார். அதன் பிறகு அவரது இலாகா மாற்றப்பட்டு, சிறிய நீர்ப்பாசனத்துறை ஒதுக்கப்பட்டது. அவருக்கு தற்போது 68 வயதாகிறது.
ஆர்.அசோக்
கர்நாடக சட்டசபைக்கு பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியில் இருந்து 6-வது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைந்தபோது அதில் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றினார். அதன் பிறகு 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எடியூரப்பா மந்திரிசபையில் போலீஸ் மந்திரியாகவும், அதன் பிறகு துணை முதல்-மந்திரியாகவும் பணியாற்றினார். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து அவர் எடியூரப்பா மந்திரிசபையில் வருவாய்த்துறை மந்திரியாக செயல்பட்டார். அவருக்கு 64 வயதாகிறது.
பிரபுசவான்
சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பீதர் மாவட்டம் அவுராத் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு எடியூரப்பா தலைமையில் அமைந்த பா.ஜனதா ஆட்சியில் பிரபுசவான், மந்திரியாக நியமிக்கப்பட்டார். கால்நடைத்துறை மந்திரியாக பணியாற்றிய அவர், கால்நடைகளை கொல்ல தடை செய்ய பசுவதை தடை சட்டத்தை கொண்டு வந்தார்.
முனிரத்னா
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக அவர் தற்போது மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். அவர் கன்னட திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
உமேஷ்கட்டி
கர்நாடக சட்டசபைக்கு 6-வது முறையாக உமேஷ்கட்டி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு 2008-ம் ஆண்டு அமைந்த பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக பணியாற்றினார். இப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் நடந்தபோது உணவுத்துறை மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் மீண்டும் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்வத் நாராயண்
பெங்களூரு மல்லேஸ்வரம் தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். 2018-ம் ஆண்டு அவர் 3-வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவரது மந்திரிசபையில் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். உயர்கல்வித்துறையை நிர்வகித்தார். அவருக்கு 54 வயதாகிறது.
ஸ்ரீராமுலு
2008-ம் ஆண்டு பல்லாரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ஸ்ரீராமுலு, அப்போது அமைந்த பா.ஜனதா ஆட்சியில் சுகாதாரத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சியை தொடங்கினார். பிறகு அந்த கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பா.ஜனதாவில் சேர்ந்தார். கடந்த 2018-ம் ஆண்டு சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், எடியூரப்பா மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றினார். சுகாதாரம் மற்றும் சமுக நலத்துறைகளை நிர்வகித்தார். ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமானவர். அவருக்கு 50 வயதாகிறது.
சோமண்ணா
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 1994-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக ஜனதா தளம் (எஸ்) சார்பில் பின்னிப்பேட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999-ம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3-வது முறையாக வெற்றி பெற்றார். 2008-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு பா.ஜனதாவில் சேர்ந்த அவர் எடியூரப்பா மந்திரிசபையில் சேர்ந்தார். 2018-ம் ஆண்டு அவர் பா.ஜனதா சார்பில் கோவிந்த்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு எடியூரப்பா மந்திரிசபையில் வீட்டு வசதித்துறை மந்திரியாக பணியாற்றினார்.
சி.சி.பட்டீல்
கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியில் இருந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். 2008-ம் ஆண்டு எடியூரப்பா மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றினார். பிறகு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் நரகுந்து தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு எடியூரப்பா மந்திரிசபையில் சேர்ந்து பணியாற்றினார்.
ஆனந்த்சிங்
விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தொகுதியில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் ஒசப்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றார். இதற்கு முன்பு 2008-13-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியிலும் மந்திரியாக பணியாற்றினார்.
கோபாலய்யா
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு பதவியை ராஜினாமா செய்த அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார். மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து எடியூரப்பா மந்திரிசபையில் சேர்ந்தார்.
நாராயணகவுடா
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தொகுதியில் இருந்து கடந்த 2013, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே தொகுதியில் அவர் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரி ஆனார். அவருக்கு 55 வயதாகிறது.
எஸ்.அங்கார்
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு அமைந்த பா.ஜனதா ஆட்சியில் அவர் மந்திரியாக நியமிக்கப்பட்டார். மீன்வளத்துறையை நிர்வகித்தார்.
முருகேஷ் நிரானி
கர்நாடக சட்டசபைக்கு 3-வது முறையாக பாகல்கோட்டை மாவட்டம் பீலகி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2008-13-ம் ஆண்டில் எடியூரப்பா மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றினார். இப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது அவர் எடியூரப்பா மந்திரிசபையில் சேர்ந்தார். கனிம வளத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.
கோட்டா சீனிவாசபூஜாரி
கர்நாடக மேல்-சபை உறுப்பினராக உள்ள கோட்டா சீனிவாசபூஜாரி எடியூரப்பா மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றினார். இப்போது மீண்டும் அவருக்கு மந்திரி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.
சுனில்குமார்
கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உடுப்பி மாவட்டம் கார்கலா தொகுதியில் இருந்து முதல் முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அவர் மீண்டும் வெற்றி பெற்றார். தற்போது அவர் முதல் முறையாக மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.
ஹாலப்பா ஆசார்
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொப்பல் மாவட்டம் எலபுர்கா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஹாலப்பா ஆசார். முதல் முறையாக அவர் மந்திரிசபையில் இடம் பிடித்துள்ளார்.
அரக ஞானேந்திரா
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 1999, 2004-ம் ஆண்டுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக அவர் மந்திரிசபையில் இடம் பிடித்துள்ளார்.
சங்கர் பட்டீல் முனேனகுப்பா
தார்வார் மாவட்டம் நவலகுந்து தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சங்கர் பட்டீல் முனேனகுப்பா, முதல் முறையாக மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.சி.நாகேஸ்
கர்நாடக சட்டசபைக்கு துமகூரு மாவட்டம் திப்தூர் தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். முதல் முறையாக மந்திரிசபையில் இடம் பிடித்துள்ளார்.
எம்.டி.பி. நாகராஜ்
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டுக்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜனதாவில் சேர்ந்தார். அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் பா.னதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு எம்.எல்.சி.யாக நியமிக்கப்பட்டு அவர் மந்திரி ஆக்கப்பட்டார். அதற்கு முன்பு அவர் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரியாக பணியாற்றினார்.
Related Tags :
Next Story