சினிமா படப்பிடிப்புக்கு பொருட்கள் வாடகைக்கு விடும் குடோனில் பயங்கர தீ விபத்து


சினிமா படப்பிடிப்புக்கு பொருட்கள் வாடகைக்கு விடும் குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 5 Aug 2021 9:24 AM IST (Updated: 5 Aug 2021 9:24 AM IST)
t-max-icont-min-icon

சினிமா படப்பிடிப்புக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெல்டிங் வைக்க பயன்படும் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி, 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர், சினிமா மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அரங்கம் அமைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அத்துடன் சினிமா படப்பிடிப்புக்கு தேவையான பிரமாண்டமான கட்டில், சேர், சோபா உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களையும் வாடகைக்கு விட்டு வந்தார்.

இதற்காக தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வானகரம் சர்வீஸ் சாலை அருகே பெரிய அளவில் குடோனை வாடகைக்கு எடுத்து, அங்கு சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடும் அனைத்து பொருட்களையும் வைத்து இருந்தார். இங்கிருந்து தேவைப்படும் இடத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்த குடோனில் 20-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இதன் அருகிலேயே கார் சர்வீஸ் செய்வது மற்றும் உதிரிபாகங்கள் விற்கும் குடோனும் உள்ளது.

நேற்று மாலை சினிமா படப்பிடிப்புக்கு பொருட்கள் வாடகைக்கு விடும் குடோனின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென அந்த குடோன் முழுவதும் பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனால் விண்ணைமுட்டும் அளவுக்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு, வானகரம், பூந்தமல்லி ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் குடோனில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்ததால் கூடுதலாக விருகம்பாக்கம், கிண்டி, எழும்பூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 11-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க டேங்கர் லாரிகளில் தண்ணீரும் எடுத்து வரப்பட்டது.

சென்னையில் இருந்து ‘ஸ்கை லிப்ட்’ எனும் இரண்டு நவீன ராட்சத தீயணைப்பு வாகனங்களும் கொண்டு வரப்பட்டு உயரத்தில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டு வந்து குடோனின் இரு பகுதிகளில் இருந்த தடுப்புகளை உடைத்து அதன் வழியாக தீயை அணைக்கும் பணியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

தீ மளமளவென அருகில் உள்ள கார் சர்வீஸ் செய்யும் மற்றும் பழைய உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனுக்கும் பரவியது. தீ விபத்தின்போது குடோனில் இருந்த வெல்டிங் செய்ய பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆங்காங்கே புகைந்து கொண்டிருந்த தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

எனினும் சினிமா படப்பிடிப்புக்கு பொருட்கள் வாடகைக்கு விடும் குடோன் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. அதன் அருகில் இருந்த கார் சர்வீஸ் செய்வது மற்றும் உதிரிபாகங்கள் விற்கும் குடோனும் எரிந்து நாசமானது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக மதுரவாயல் பைபாசில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்ததுடன், செல்போனிலும் படம் பிடித்தனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசார் வானகரம் சர்வீஸ் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு அடைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட குடோனுக்கு பின்புறம் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை மையம் மற்றும் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த பிளாஸ்டிக் சேர்கள் தீயின் வெப்பத்தால் உருகின. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story