ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் 6 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்


ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் 6 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 10:38 AM IST (Updated: 5 Aug 2021 10:38 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே அமையவுள்ள 6 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் தரையில் உருண்டு, புரண்டு போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த சாலை தச்சூர் கூட்டுச்சாலை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பருத்திமேனிகுப்பம், தொளவெடு, பனப்பாக்கம், சென்னங்காரனை, பாலவாக்கம், பேரன்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

இந்த சாலையை அமைத்தால் வருடத்துக்கு மூன்று போகங்கள் விளைவிக்கக்கூடிய 500 ஏக்கர் விளைநிலங்கள், பல வீடுகள், கோவில்கள், அரசு பள்ளி கட்டிடங்கள் பாதிப்படையும் என தெரிகிறது.

இந்நிலையில் மேற்கூறப்பட்ட கிராம பொதுமக்கள், விவசாயிகள் 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் 6 வழிச்சாலை அமையவுள்ள வழித்தடத்தில் நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பத்திர நகல்களை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் கொண்டு வந்தால் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று நஷ்டஈடு மதிப்பீடு குழு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதன்படி நேற்று மேற்கண்ட கிராம பொதுமக்கள், விவசாயிகள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் வந்தடைந்தனர். அங்கு அவர்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் உருண்டு புரண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 போகங்கள் விலையக்கூடிய தங்களது நிலங்களை ஆறுவழிச்சாலை அமைக்க நிலம் கொடுக்க மாட்டோம் என்றும், மாற்றுப்பாதையில் சாலையை அமைக்க வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பியவாறு தரையில் புரண்டு நூதன போராட்டம் நடத்தினர்

அதற்குள் அங்கு நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் அதிகாரிகளுடன் அங்கு வந்தார். அவருடன் தரையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்தியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆறு வழிச்சாலை நிலம் கொடுக்க மாட்டோம் என்று உரத்த குரலில் கோஷங்கள் எழுப்பினர். உங்களது எதிர்ப்புகளை மனுவாக எழுதிக்கொடுத்தால் அரசுக்கு அனுப்பி வைப்போம் என்று கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

Next Story