ஆன்லைன் ரம்மி சூதாட்ட பிடியில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெறவேண்டும்


ஆன்லைன் ரம்மி சூதாட்ட பிடியில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெறவேண்டும்
x
தினத்தந்தி 5 Aug 2021 6:32 PM IST (Updated: 5 Aug 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் ரம்மி சூதாட்ட பிடியில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை,

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்வை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இளைஞர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, பொதுமக்கள், தாய்மார்கள் பல்வேறு அமைப்புகள் மூலமாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அப்போதைய அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாகத் தடை செய்யப்பட்டது.

இது, கோடிக்கணக்கான பெற்றோர்களின் வயிற்றில் பால் வார்த்தது. இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கு ஏப்ரல் மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றதால் இவ்வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து அ.தி.மு.க. அரசு இயற்றிய சட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

மேல்முறையீடு

மூத்த வக்கீல்கள் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டில் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும்போது, தி.மு.க. அரசு உள்நோக்கத்தோடு சரியான முறையில் பிரபல மூத்த வக்கீல்களை நியமித்து முறையாக வாதாடவில்லை என்றே தெரிகிறது. வீர விளையாட்டோடு ஆன்லைன் சூதாட்டத்தை ஒப்பிட்டு மெத்தப் படித்த வக்கீல்கள் வாதிடுகையில், அதற்கு எதிரான வாதத்தை தி.மு.க. அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உரிய முறையில் எடுத்து வைக்காதது விந்தையாக உள்ளது.

விடியல் தருவோம் என்றுகூறி ஆட்சிக்குவந்த தி.மு.க. அரசு, தமிழக இளைஞர்களை இருட்டுக் குகையில் தள்ளி, அவர்களது வாழ்க்கையை நாசமாக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனவே அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெற வேண்டும். அப்போதுதான், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் பிடியில் இருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற முடியும். புதிய சட்டம் கொண்டு வரும் வரை உடனடியாகத் தடையாணை பெற மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story