தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
சாத்தான்குளத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
2 வயது குழந்தை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 25). இவர்களுடைய மகன் ஜோஸ்துரை (2). இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். அங்குள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஐஸ்வர்யா பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தனசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இறந்தார்.
இதைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக, ஐஸ்வர்யா தன்னுடைய குழந்தையுடன் சாத்தான்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து வசித்து வருகிறார்.
தரைமட்ட தொட்டி
நேற்று காலையில் ஐஸ்வர்யா தன்னுடைய குழந்தையை வீட்டில் விட்டு விட்டு, அங்குள்ள வாரச்சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். அப்போது வீட்டின் வளாகத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் குழந்தை ஜோஸ்துரை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.
இதன்பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த ஐஸ்வர்யா தன்னுடைய குழந்தையைக் காணாததால் அதிர்ச்சி அடைந்து தேடினார்.
அப்போது வீட்டின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் ஜோஸ்துரை விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.
பலி
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜோஸ்துரையை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜோஸ்துரை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த ஜோஸ்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story