வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தேனி:
கடமலை-மயிலை ஒன்றியம் முத்தாலம்பாறை, மயிலாடும்பாறை ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
தாழையூத்து கிராமத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குகளுடன் கூடிய 7 பசுமை வீடுகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்பு அங்கு வசிக்கும் பழங்குடியின பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தொப்பையாபுரத்திற்கு சென்று அங்கு ரூ.5 லட்சத்தில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டும் பணிகளை பார்வையிட்டார். பின்பு மயிலாடும்பாறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் அதிக அளவு பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சை நிறுத்திய கலெக்டர் டிரைவர் மற்றும் கண்டக்டரை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
பின்னர் ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் தேனி சாலையோரம் தூய்மை காவலர்கள் சிலர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை பார்த்த கலெக்டர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, பணிகளை பார்வையிட்டார். பின்பு அருகில் இருந்த டீக்கடையில் தூய்மை காவலர்களுடன் சேர்ந்து டீ அருந்தினார்.
முன்னதாக மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்ற தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராசன் கலந்துகொண்டு வீடு, வீடாக சென்று நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகரன், கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் சரவணன், திருப்பதி முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story