ஜோலார்பேட்டை அருகே 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு


ஜோலார்பேட்டை அருகே 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 5 Aug 2021 5:51 PM GMT (Updated: 2021-08-05T23:21:59+05:30)

ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டுச் சம்பவம் நடந்தது. அதில் மொத்தம் 35 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

ஜோலார்பேட்டை

மருத்துவமனை நர்சு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் என்.ஜி.ஓ. நகர் வீரமாமுனிவர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40), ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரின் மனைவி சங்கீதா, பர்கூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இதனால் சங்கீதா வேலைக்குச் சென்று விட்டார்.

வெங்கடேசன் சென்னையில் நடந்த காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வந்தபோது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த 25 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் இவரின் பக்கத்தில் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தாசில்தார் பிரபுகணேஷ் (60) தனது பெற்றோரை பார்க்க கடலூர் சென்று விட்டார். அவரின் மனைவி கிருஷ்ணவேணி உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வாணியம்பாடி பகுதிக்குச் சென்று விட்டார். வெங்கடேசன் வீட்டில் திருடிய அதே மர்மநபர்கள் பிரபுகணேஷ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

போலீஸ் விசாரணை

மேற்கண்ட இரு திருட்டுச் சம்பவங்கள் குறித்துத் தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் பதிவான கை ரேகையை பதிவு செய்தனர்.

Next Story