காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை
புன்னம்சத்திரம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நொய்யல்
திருமணத்திற்கு மறுப்பு
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உள்ள குட்டக்கடை வசந்தம்காலனியை சேர்ந்தவர் முத்தன். கல்உடைக்கும் தொழிலாளி. இவரது மகன் ரமேஷ்(வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள 18 வயது பூர்த்தியாகாத ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து, அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
இதுகுறித்து ரமேஷின் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. எனவே 18 வயது பூர்த்தி ஆகட்டும் பின்பு நாங்கள் திருமணத்தை செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு ரமேஷ் உடனே அந்த பெண்ணுடன் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 18 வயது பூர்த்தி ஆகாத பெண்ணை திருமணம் செய்து வைத்தால் போலீசார் நம் பிள்ளையை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துவிடுவார்கள் எனக்கருதி அதற்கு பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.
தற்கொலை
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரமேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறி மாற்றும் கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் ரமேஷின் உடலை கீழே இறக்கி வைத்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு ரமேஷின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்தன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story