ரூ.7 லட்சம் கையாடல் செய்ததாக பனப்பாக்கம் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் மீது வழக்கு
பனப்பாக்கம் பேரூராட்சி வளர்ச்சி பணிக்கான நிதியில் ரூ.7 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் செயல் அலுவலர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர்
ரூ.7 லட்சம் கையாடல்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் கடந்த 2018-19-ம் ஆண்டு செயல் அலுவலராக பணியாற்றியவர் சம்பத்குமார் (வயது 52). இவர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்க, தெரு மின்விளக்கு பொருத்துதல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்து பல லட்சம் கையாடல் செய்துள்ளதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பத்குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சம்பத்குமார் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி டெண்டர் விட்டதும், செய்யாத பணிகளுக்கு போலியாக பில் தயாரித்து நிதி முறைகேடு செய்து ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்து 534 கையாடல் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சம்பத்குமார் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செயல் அலுவலர் மீது வழக்கு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சம்பத்குமார் பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் தனக்கு வேண்டிய நபர்களுக்கு டெண்டர் விட்டுள்ளார். டெண்டருக்கு 3 பேரிடம் விலைப்பட்டியல் (கொட்டேசன்) வாங்கி, அதற்கான பொருட்களை வாங்காமல் போலியாக பில் தயாரித்து பணத்தை கையாடல் செய்துள்ளார். அவர் பில் வாங்கியதாக கணக்கு காட்டிய பெயரில் எவ்வித கடைகளும் இல்லை.
மேலும் பேரூராட்சி பகுதிகளில் உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்தது, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை தைக்க துணிகள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரெயின்கோட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு மார்க்கெட் நிலவரத்தை விட அதிக விலையில் பில் தயாரித்துள்ளார்.
மேலும் வாங்காத பொருட்களுக்கும் பில் வைத்து அலுவலக ஆவணத்தில் கணக்கு காட்டி உள்ளார். இவ்வாறாக சம்பத்குமார் ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்து 534 கையாடல் செய்துள்ளார். அவர் தற்போது கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். சம்பத்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story