கொரோனா குறித்த விழிப்புணர்வு போட்டிகள்


கொரோனா குறித்த விழிப்புணர்வு போட்டிகள்
x
தினத்தந்தி 5 Aug 2021 8:26 PM GMT (Updated: 5 Aug 2021 8:26 PM GMT)

கொரோனா குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பெரம்பலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா 3-வது அலை வராமல் தடுப்பதற்கும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் நாளை (சனிக்கிழமை) வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 5-வது நாளான நேற்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ-மாணவிகளிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வலைத்தளங்கள் மற்றும் நேரடியாக விளம்பர சுவரொட்டிகள் வடிவமைப்பு, ஓவிய போட்டி, கொரோனா விழிப்புணர்வு ஸ்லோகன் எழுதும் போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த போட்டிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிகாட்டினர். முன்னதாக கொரோனா தடுப்பு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அதனை பின் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர், சாரண, சாரணியர் இயக்கத்தினர் ஆகியோர் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், கல்வி மாவட்ட அலுவலர்கள் மாரி.மீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்), முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன், அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story