கார் மோதி கல்லூரி மாணவர் பலி
ஆற்றூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது தடுமாறி விழுந்ததில், கார் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
திருவட்டார்:
ஆற்றூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது தடுமாறி விழுந்ததில், கார் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
கல்லூரி மாணவர்
மார்த்தாண்டம், அட்டக்குளத்தை சேர்ந்த டேவிட்ராஜ் மகன் பெஞ்சமின் (வயது 20). இவருடைய நண்பர் கொடுங்குளம் கொல்லக்குளத்தைச் சேர்ந்த பென்சிகர் மகன் பிரபின் (20). இவர்கள் இருவரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை பெஞ்சமினும், பிரபினும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆற்றூருக்கு சென்று விட்டு மீண்டும் மார்த்தாண்டம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபின் ஓட்டி செல்ல, பெஞ்சமின் பின்னால் அமர்ந்திருந்தார்.
பரிதாப சாவு
இருவரும் கல்லுப்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற ஒரு அரசு பஸ்சை முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் பின்னால் அமர்ந்திருந்த பெஞ்சமின் நடுரோட்டில் விழுந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த கார், பெஞ்சமின் மீது மோதியது. இதில் பெஞ்சமின் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பிரபின் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெஞ்சமினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story