லாக்கருடன் நகை, பணத்தை கொள்ளையடித்த வேலைக்கார பெண் உள்பட 2 பேர் கைது


லாக்கருடன் நகை, பணத்தை கொள்ளையடித்த வேலைக்கார பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2021 5:59 AM IST (Updated: 6 Aug 2021 6:03 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் லாக்கருடன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வேலைக்கார பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி, டபுள்ரோட்டை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 63). ஓய்வுபெற்ற பெல் நிறுவன அதிகாரி. இவர் கடந்த 1-ந் தேதி மதியம் ஸ்ரீராம்நகரில் உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். வீட்டில் அவரது சித்தப்பா மற்றும் சித்தி ஆகியோர் மட்டும் இருந்தனர். அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் டி.வி.மேஜையின் கீழ் இருந்த சிறிய அளவிலான லாக்கரை தூக்கிச் சென்றனர். 

அதில் 30 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  பிச்சாண்டியின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர்.

அதில் பிச்சாண்டி வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண்ணான ஆற்காடு பெரியகுளம் 5-வது தெருவை சேர்ந்த பர்வீன் (வயது 25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். 

விசாரணையில் பர்வீன் அவரது உறவினரான பானு (40) என்பவருடன் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், பர்வீன் அவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வள்ளலார் தண்ணீர் தொட்டி அருகே உள்ள உறவினர் நஷீர் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். நஷீரின் மனைவி பானு. சம்பவத்தன்று பிச்சாண்டி குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தபோது பர்வீன், பானு இருவரும் சேர்ந்து நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Next Story