திருத்தணியில் ஆற்றில் தலை, கால்கள் இல்லாத அழுகிய நிலையில் மனித உடல் கொலையா? போலீசார் விசாரணை


திருத்தணியில் ஆற்றில் தலை, கால்கள் இல்லாத அழுகிய நிலையில் மனித உடல் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Aug 2021 4:33 AM GMT (Updated: 2021-08-06T10:03:42+05:30)

திருத்தணி நந்தி ஆற்றில் தலை, கால்கள் இல்லாத அழுகிய நிலையில் காணப்பட்ட மனித உடலை போலீசார் கைப்பற்றினார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கலைஞர் நகர் எதிர்புறம் உள்ள நந்தி ஆற்றில் அழுகிய நிலையில் மனித உடல் மிதப்பதாக திருத்தணி போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு அழுகிய நிலையில் மனித உடல் மிதப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் இது குறித்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இரவு நேரமாகிவிட்டதால் ஆற்றில் இறங்கி அழுகிய நிலையில் இருக்கும் உடலை எடுக்க முடியாது என்றும் அசம்பாவிதம் ஏற்படும் என்றும் போலீசாருக்கு தெரிவித்துவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டனர்.

செய்வதறியாமல் திகைத்த போலீசார் வேறு வழியில்லாமல் அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ டிரைவர்களை ஆற்றில் இறக்கி உடலை வெளியே எடுத்தனர். தலையும், 2 கால்களும் இல்லாமல் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

அவர் ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story